தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 2 ஆவது டெஸ்டில் இந்­திய அணி முதல் இன்­னிங்ஸில் 307 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­த போதிலும் விராட் கோஹ்லி மாத்திரம் தனி ஒரு­வ­னாக போராடி 153 ஓட்­டங்­களைப் பெற்றார். 

இந்­திய -தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 3 போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்டி, செஞ்­சு­ரியன் நகரில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்பமாகியது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய தென்­னா­பி­ரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 269 ஓட்­டங்­களை எடுத்­தது. இந்­நி­லையில் இரண்டாம் நாளன்று அந்த அணி 335 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டு­க­ளையும் இழந்­தது. 

இந்­திய தரப்பில் அதி­க­பட்­ச­மாக அஷ்வின் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். 

இதன்­பி­றகு தனது முதல் இன்­னிங்ஸைத் தொடர்ந்த இந்­திய அணி 2ஆம் நாள் முடிவில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 183 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. 

விராட் கோஹ்லி 85, பாண்­டியா 11 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். தொடக்க வீரர் விஜய் சிறப்­பாக விளை­யா­டி­னாலும் எதிர்­பா­ராத வித­மாக 46 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

புஜாரா முதல் பந்­தி­லேயே ரன் அவுட் ஆனது ஆட்­டத்தில் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. ராகுல் 10, ரோஹித் ஷர்மா 10, பார்தீவ் படேல் 19 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­ற­ம­ளித்­தார்கள்.

நேற்­றைய நாளின் தொடக்­கத்தில் இந்­திய அணிக்கு 5 விக்­கெட்­டுக்கள் மீத­மிருந்த நிலையில் 152 ஓட்­டங்கள் பின்­தங்­கி­யி­ருந்­தது. 85 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­டத்தைத் தொடங்­கிய இந்­தியத் தலைவர் விராட் கோஹ்லி, 146 பந்­து­களில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவ­ரு­டைய  21ஆவது டெஸ்ட் சத­மாகும்.  ஆனால் அடுத்த ஓவரில்  பாண்­டியா ரன் அவுட் ஆகி இந்­திய அணியின் நிலைத்­தன்­மையை குலைத்தார். 

அதன்­பி­றகு கள­மி­றங்­கிய அஷ்வின், நிதா­ன­மாக ஆடாமல் தகுந்த இடை­வெ­ளி­களில் பவுண்­ட­ரிகள் அடித்­ததால் இந்­திய அணியின் ஓட்ட எண்­ணிக்கை நன்கு உயர்ந்­தது.

62 பந்­து­களில் கோஹ்­லியும் அஷ்­வினும் 50 ஓட்­டங்கள் சேர்த்து பாண்­டி­யாவின் இழப்­பினால் பாதிப்பு வராமல் பார்த்­துக்­கொண்­டார்கள்.  அரைச்சத­மெ­டுப் பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட அஷ்வின், 38 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்­த­வர்கள் அடுத்­த­டுத்து நடையைக் கட்­டினர். 

153 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் விராட் கோஹ்லி ஆட்­ட­மி­ழக்க இந்­திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 92.1 ஓவர்களில் 307 ஓட்டங்களைப் பெற்றுள்ள இந்திய அணி 28 ஓட்டங்கள் பின்தங்கியது. 

அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி  தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடக் களமிறங்கியது.

தென்னாபிரிக்க அணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின்  4 ஆம் நாளான இன்று தென்னாபிரிக்க அணி 118 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆரம்பிக்கவுள்ளது. ஆடுகளத்தில் எல்கர்  36 ஓட்டங்களுடனும் வில்லியர்ஸ் 50 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.