அட்டனில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மாணவனொருவன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அட்டன் எம்.ஆர் நகரப்பகுதியில் இன்று காலை 7 மணியளவில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவனே காயமடைந்துள்ளார்.

டிக்கோயா பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், அட்டன் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய மாணவர்களும், சாரதியும் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கார் சாரதி வாகனத்தை தவறான பகுதியில் செலுத்தியதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.