இரு வாரங்களுக்கு முன் விபத்துக்குள்ளான தமிழ் இளைஞர் ஒருவரது இரு சிறு நீரகங்களும் சிங்கள இளைஞர்கள் இருவருக்கு கண்டி வைத்தியசாலையில்  வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

கண்டி- மெனிக்கின பகுதியில் விபத்துக்குள்ளான ராமசாமி ரவீந்திரன், பேராதனை வைத்திய சாலையில் அதி தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிட்சை பெற்று வந்த  நிலையிலும் அவரது மூளையின் பகுதிகள் செயலிழந்து போயுள்ளன.

இதனை அடுத்து இளைஞனின் பெற்றோர் கண்டி வைத்திய சாலையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யும் பிரிவில் தமது மகனின் உடற்பாகங்களை தானம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்ததுள்ளனர்.

அதனடிப்படையில் இளைஞனின் இரண்டு சிறு நீரகங்களும் அகற்றப்பட்டு, சிறு நீரக  குறைப்பாட்டால் உயிருக்கு போராடிய இரு இளைஞர்களுக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல் வைத்திய சாலையின் நினைவிழக்கச் செய்யும் வைத்தியர் சமன் ரத்நாயக்க, கண்டி வைத்திய சாலையின் அவயவங்கள் பொருத்தும் பிரிவின் வைத்திய நிபுணர் சரித்த பெர்னாந்து உட்பட மற்றும் குழுவினரால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலுள்ள ஒருவரது அவயவம் இரு இளைஞர்களுக்கு புத்துயிர் அளித்துள்ளதாகவும் இதற்கு மனமுவந்து தானம் வழங்குவது மிக முக்கிய விடயம் என்றும் அது ஊடக அறிவுறுத்தல்கள் மூலம் மக்கள் மத்தியில் சென்றுள்ளதாகவும் தொடர்புடைய பெற்றோர் உட்பட மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவயவங்கள் பொருத்தும் பிரிவின்  வைத்தியர்  அருன அபேசிங்க தெரிவித்தார்.