புதிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகக் கலந்துரையாடலில் குறிப்பிடுகின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்லாது வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது நகைப்புக்கிடமானதாகும் என்றும் மனச்சாட்சிக்கேற்ப அரசியலில் ஈடுபடுமாறு தாம் அவர்களுக்கு கூறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் செயலாளரும் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் கடந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளை வகித்தவர்களாகவும் உள்ளனர்.

 இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டு அவர்கள் மேற்கொண்டு வருகின்ற விடயம் இரண்டாவது பண்டாரநாயக்க படுகொலையாகும்.

இன்று தமது அரசியல் அலுவலகங்களுக்கு பண்டாரநாயக்கவினதும் அம்மையாரினதும் உருவப்படங்ளை அவசியமாக கருதுகின்றவர்கள் அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதும் ஏனைய நிகழ்ச்சிகளின்போதும் பண்டாரநாயக்கவை நினைவு கூருமாறு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயத்தை கட்சியில் முன்னாள் தலைவர்களை நினைவு கூருதல் என்று மாற்றுவதற்கு ஆலோசனை வழங்கியவர்களாவர்.

ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டுவதிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் தான் ஈடுபட்டுவருவது நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலாகும்.

சுகாதார அமைச்சராக இருந்தபோது நாட்டு மக்களுக்காக மேற்கொண்ட தீர்மானங்களின் காரணமாக புகையிலைக் கம்பனிகள் உள்ளிட்ட பல்தேசிய கம்பனிகள் தம்முடன் கோபித்துக் கொண்டதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகள் தம்மை எதிரியாக ஆக்கிக்கொண்டனர் என்றும் இன்று ஊழல் மோசடிக்கு எதிராக ஆணைக்குழுக்களை அமைத்து வருவதும் இலகுவான விடயமல்ல.

 எனினும் இந்நாட்டு மக்கள் தன்னுடன் இருக்கின்றனர். இந்த மக்கள் நம்பிக்கையுடன் நாட்டுக்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன். 

இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களி்ன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு கொழும்பு மாவட்டத்தின் முதலாவது மக்கள் சந்திப்பாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் ஹோமாகமயில் நேற்று இடம்பெற்றது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.