மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா. அசோக் என்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அலுவலகத்தினை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தோல்வியின் பயத்தில் இருப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.