அமெரிக்காவில், பாட்டியையும் பேத்தியையும் கொலை செய்த குற்றத்தில் இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தத்தெடுக்கப்பட்ட மகளைக் கொலை செய்த குற்றத்தில் மற்றொரு இந்தியருக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் என, அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

வெஸ்லி மெத்யூஸ் (37), அவரது மனைவி சினி மெத்யூஸ் ஆகிய இந்தியத் தம்பதியர், இந்தியாவின் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஷெரீன் என்ற மூன்று வயதுக் குழந்தையைத் தத்தெடுத்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம், ஷெரீனைக் காணவில்லை என்று மெத்யூஸ் பொலிஸில் புகாரளித்தார். வாரக் கணக்கில் தொடர்ந்த பொலிஸின் தேடுதல் நடவடிக்கையில், மெத்யூஸின் வீட்டுக்கு வெளியே ஷெரீன் பிணமாகக் கிடந்து கண்டெடுக்கப்பட்டார்.

முதலில், பால் அருந்த மறுத்ததற்குத் தண்டனையாக ஷெரீனை அதிகாலை 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறினார் மெத்யூஸ். பின்னர், உணவு உண்ணும்போது மூச்சடைத்து ஷெரீன் பலியானதாகக் கூறினார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஷெரீனின் உடற்கூற்று ஆய்வில், கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் மெத்யூஸுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அரச சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

பாட்டியையும் பேத்தியையும் கொலை செய்த குற்றத்தில் இந்திய இளைஞர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி ஓரிரு நாட்களே ஆகியுள்ள நிலையில், மற்றொரு இந்தியருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

பாட்டியையும், பேத்தியையும் கொலை செய்த இந்தியருக்கு அமெரிக்காவில் மரணதண்டனை!!!