இந்தியா - ராஜஸ்தானில் கணவனை இழந்து தனிமையிலிருந்த தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வாலிற்கு  இரண்டு மகள்கள் உள்ளனர். கீதா அகர்வாலின் கணவர் கடந்த 2016ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க கீதாவின் இளைய மகள் சன்ஹிடா முடிவு செய்து இணையதளம் மூலம் மணமகன் தேவை என பதிவிட்டார்.

இதற்கு கீதா மட்டுமின்றி சன்ஹிடாவின் அக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மனம் தளராத சன்ஹிடா தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கேன்சர் நோயால் மனைவியை இழந்த கே.ஜி.குப்தா என்பவர் சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து சன்ஹிடா ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துவைத்து குப்தாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

 தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தில் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக சன்ஹிடா தெரிவித்துள்ளார்.