ஏழு வயது பாகிஸ்தானிய சிறுமி கடத்தப்பட்டு, வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் கஸூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஸைனப் அன்சாரி. இவர், கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாயன்று ஒரு குப்பைத் தொட்டியில் ஸைனப்பின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

ஸைனப்பின் கொலைக்கு முன்னதாக, கடந்த வருடத்தில் இதேபோன்ற பதினொரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டிய கஸூர் மக்கள் கொதிப்படைந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

இத்தனை நடந்தும் அலட்சியமாக இருப்பதாகக் கருதிய அவர்கள், பொலிஸார் மீது கற்களை வீசினர். கலவத்தைத் தடுக்குமுகமாக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

ஒருவாறு போராட்டங்கள் ஓய்வுக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பின் பேசிய பொலிஸ் அதிகாரிகள், ஸைனப்பைக் கடத்திச் சென்ற சந்தேக நபர் குறித்த கண்காணிப்பு கெமரா பதிவுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் உதவியுடன் குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர்.