மலையக மக்களுக்கு வீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Published By: Priyatharshan

09 Feb, 2016 | 12:02 PM
image

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மலையக  மக்களுக்கு 4,000 வீடுகளை அமைத்தலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்கள் வருமாறு,

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தோட்டப்பகுதி வாழ் மக்களுக்கு 4,000 வீடுகளை அமைத்தல்  (விடய இல. 32) 

இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2012 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் மூன்று ஆண்டு காலப்பகுதியில், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தோட்டப்பகுதி வாழ் மக்களுக்கு 4,000 வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சித்திட்டம், பயனாளிகள் தலைமையில் தோட்டப்பகுதி வீடமைப்பு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நிர்மாணப்பணியில் ஈடுபடும் நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்  முதற்கட்டமாக 1,134 வீடுகளுக்கான சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. எஞ்சிய 2,866  வீடுகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு வீடும் 07 பேர்ச்சஸ் விஸ்தீரணமான காணியில், 550 சதுர அடி பரப்பு வீடமைப்புக்கான நிலத்தைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், அதற்குச் செலவாகும் மொத்தத் தொகை 1,120,000.00 ரூபாவாகும். 

இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாடொன்று அவசியம் என்பதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற சட்ட மூலம் (விடய இல 09)

நீதிமன்ற வளவுகளில் சேர்கின்ற சான்றுப் பொருட்கள் அவ்விடயம் தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாகும். 

நீதிமன்றங்களில் வசதிகளின்மைஈ சான்றுப் பொருட்கள் சேதமடைதல் மற்றும் சான்றுப் பொருட்கள் குவிந்து விடுதல் என்பன நீதிமன்றங்களின் மதிப்புக்கு பாதகமாகின்ற காரணங்கள் என்பதால் வழங்குகள் முடிவடைவதற்கு முன்னர் அவை சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்காக குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் 431 மற்றும் 432 ஆம் பிரிவுகளைத் திருத்தஞ் செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திருத்தஞ் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அங்கீகராத்துக்காக பாராமன்றத்தின் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

பதுளையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதேச நிலையமொன்றை அமைப்பதற்காக காணியை ஒதுக்கிக் கொள்ளல்  (விடய இல. 14)

பல்கலைக்கழகப் பிரவேசத்தைப் போன்றே ஏனைய உயர் கல்விக்கான வாய்ப்புக்களை இழக்கும் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதேச நிலையமொன்றை பதுளையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணம் இலங்கையின் மாகாணங்களிடையே நான்காவது பெரிய மாகாணமாக இருப்பதுடன் பதுளை மற்றும் மொனராகலை போன்ற இரண்டு மாவட்டங்களைக் கொண்டமைந்துள்ளது. 

இந்த மாகாணத்தில் 886 பாடசாலைகள் இருப்பதுடன் சுமார் 280,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும் உயர் கல்வியை தொடரும் மாணவர் எண்ணிக்கையில் கேள்விக் குறி நிகழ்கின்றது. 

எனவே உயர் கல்விக்கான வாய்ப்பை இழக்கும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போன்றே ஊவா மாகாணத்தில் பணிபுரியும் பட்டம் பெற்றிராத சுமார் 7500 ஆசிரியர்கள் பட்டப் பாடநெறிகளை பயிலுவதற்கும், தொழிற் சந்தையில் பாரிய கேள்வி நிலவும் பொறியியல் துறை, சட்டத்துறை, முகாமைத்துவம், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், தாதியியல் போன்ற பட்டப் பாடநெறிகளைப் பயிலுவதற்கும் பதுளையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதேச நிலையமொன்றை தாபிப்பது பதுளை மாவட்டத்தில் பதுளை பிரதேச செயலகப் பிரிவில் ஹிங்குறுகமுவ கிராமத்தில் அமைந்துள்ள காணி மற்றும் அக்காணியில் அமைந்துள்ள சொத்துக்களை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பதுளை பிரதேச நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு உரிமை மாற்றம் செய்வதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய விஞ்ஞான மத்திய நிலையம் ஒன்றினை அமைத்தல்  (விடய இல. 20) 

இலங்கையின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை புரிந்து கொள்வதனூடாக பெற்றுச் கொள்வதற்கு எமது மக்களை தூண்டக் கூடிய அதிகாரமளிக்கக் கூடிய ஆக்க எழுச்சியூட்டக்கூடிய விதத்தில் மிகு நவீனமான காட்சி பொருட்களையும் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள குறித்த நிலையமானது விசேடமாக பள்ளிக்கூட மாணவர்களை இலகுவாக கவரும் விதத்தில் மெகாபொலிஸ் கருத்திட்டத்திற்குள் மாலபேயில் அமைக்கப்படவுள்ளது. 

இயற்கையின் விந்தைகள், விவசாயம், புவி, காலநிலை மாற்றம், உடம்பின் விந்தைகள், கைத்தொழில்மயமாக்கலும் தொழில்நுட்பவியல் புரட்சிகளும், விஞ்ஞானத்தின் அரிச்சுவடி, விண்வெளியும் வானியலாராய்ச்சியும், பாரம்பரிய சுதேச அறிவுகள், விஞ்ஞான தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல், எமது விஞ்ஞான தொழில்நுட்பமும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் உள்ளடக்கிய குறித்த விஞ்ஞான நிலையத்தை அமைக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதி சட்டத்தை இரத்துச் செய்து இதற்குப் பதிலாக சட்டமொன்றை நிறைவேற்றுதல் (விடய இல. 18)

1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதி சட்டத்தை இரத்துச் செய்து இதற்குப் பதிலாக புதிதாக சட்மொன்றை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிவுத்தலுக்கமையவும், சுகாதார அமைச்சரினதும் அவதானிப்புரையை பரீசீலனை செய்து இதற்கமைவாக சட்ட வரைஞரால் வகுக்கப்பட்ட இறுதி சட்ட மூலத்தை பாராமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மின்வலு சக்தி மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சுக்கும் மற்றும் ஜேர்மனி கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களுக்கும் சக்தி விடயங்களுக்குமான கூட்டு அமைச்சுக்கும் இடையிலான இலங்கையின் சக்தித் துறை நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான கூட்டுறவு   (விடய இல. 22)

சூரிய சக்திப் பேட்டைகள் மற்றும் காற்று மூல சக்திப் பேட்டைகள் தொடர்பில் மீளப்புதுப்பிக்கதகு சக்தி வளத்தில் மின்சார உற்பத்திக் கருத்திட்டங்களின் அபிவிருத்தி, மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியை தேசிய க்றிட் மின்சார முறைமைக்கு உள்ளீர்க்கும் கொள்திறனை அதிகரிப்பது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அடிப்படையிலான மின்சார உற்பத்தியில் பயன்படும் பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, நிலைபெறுதகு சக்தி அபிவிருத்தி தொடர்பான கற்கை மற்றும் பயிற்சி ஆகிய துறைகளை அடக்கிய இலங்கையின் வலு சக்தித்துறை அபிவிருத்தியின் நிமித்தம் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜேர்மன் நாட்டிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மின்வலு சக்தி மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சுக்கும் மற்றும் ஜேர்மனி கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களுக்கும் சக்தி விடயங்களுக்குமான கூட்டு அமைச்சுக்கும் இடையிலான இலங்கையின் சக்தித் துறை நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தித் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்தல் (2016 – 2018) (விடய இல. 23)

ஜனாதிபதியின் தலைமையில் கமத்தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்முயற்சி விடயங்களில் ஈடுபடுகின்ற தனியார் கம்பனிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புக்களுக்கு இணங்க உணவு உற்பத்தித் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமான முறையில் செயற்படுத்தும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான யோசனைகளை செயற்படுத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆட்கள் வியாபாரத்தைக் கண்காணித்தல் மற்றும் தடுத்து நிறுத்துவதற்கான தேசிய தந்திரோபாயத் திட்டம் - (2015-2019) (விடய இல. 26)

தற்காலத்தில் அடிமைத்தனம் என அழைக்கப்படுகின்ற ஆட்கள் வியாபாரம் மிகக் கொடியதொரு குற்றமாகும். விசேடமாக பெண்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட ஆட்கள் வியாபாரத்தை தடுத்தல், தடுத்து நிறுத்துதல் மற்றும் அதற்குத் தண்டனை விதித்தலுக்கான ஐக்கிய நாடுகளின் வரைவேடு இலங்கையினால் 2015 ஆம் ஆண்டு யூன் மாதம் 17 ஆம் திகதி வலுவாக்கப்பட்டது. 

இவ்ரைவேட்டின் மூலம் இது வலுவாக்கப்பட்ட இராச்சியங்களினுள் ஆட்கள் வியாபாரத்தை தடை செய்தல் மற்றும் உள ரீதியாக சுகப்படுத்துதல் மற்றும் அந் நோக்கங்களை எய்து  கொள்வாதற்காக இராச்சியங்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு செயலாற்றுகின்றது.  

எனவே ஆட்கள் வியாபாரத்தைக் கண்காணித்தல் மற்றும் தடுத்து நிறுத்துவதற்கான தேசிய தந்திரோபாயத் திட்டம் - (2015-2019) இனை நீதிமன்ற அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வர்ப்பட்டது. அமைச்சரவை மூலம் குறித்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 

இலங்கை வியாபார கடல் பயணிகளுக்கு சர்வதேச தரத்தில் அங்கீரிக்கப்படுகின்ற “தொடர்ச்சியாக விடுவிக்கும் சான்றிதழ்” மற்றும் முன்னேற்ற சான்றிதழ்” ஆகியவற்றை வெளியிடும் வேலைத்திட்டம் (விடய இல. 31)

இலங்கையில் கடற்றொழிலில் மட்டும் ஏனைய கடல் சார்ந்த வியாபாரங்களில் ஈடுபடும் வியாபாரிகளின்  நலன் கருதி இலங்கை வியாபார கடல் பயணிகளுக்கு சர்வதேச தரத்தில் அங்கீரிக்கப்படுகின்ற “தொடர்ச்சியாக விடுவிக்கும் சான்றிதழ்” மற்றும் முன்னேற்ற சான்றிதழ்” ஆகியவற்றை வெளியிடும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் துறைமுக மற்றும் கடற்றொழில் அமைச்சர்  அர்ஜுன  ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யுனிறெர்ரா தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்  (விடய இல. 35)

யுனிறெர்ரா என்பது கனடாவின் உலக பல்கலைக்கழக சேவை மற்றும் கனடாவின் சர்வதேச கற்கைகள், ஒத்துழைப்புக்கான நிலையம் என்பன இணைந்து செயற்படுத்தப்படும் தன்னார்வ ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றாகும். 

இந்நிகழ்ச்சித் திட்டத்தினை 2016 – 2020 காலப்பகுதியில் இலங்கையில் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் இலக்கிடப்பட்ட உப துறைகளாவன சுற்றுலா, உபசரிப்பு மற்றும் ஆடைத்துறை என்பனவாகும். 

குறித்த 05 வருட காலப்பகுதியின் போது 80,000 பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கனடாவினால் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல 207 மில்லியன் கனெடிய டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிர்வனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாதிட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2016 – 2018 காலப்பகுதிக்காக கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திடமிருந்து கடனொன்றைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக கொரியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான வரைசட்டக உடன்படிக்கை  (விடய இல. 36)

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற பரஸ்பர நட்புறவையும் பொருளாதார ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்தும் நோக்கில் கொரிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் உடன்பாடு காணப்படுகின்ற கருத்திட்டங்களுக்கு நிதியிடுவதற்காக ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியன்களைத் தாண்டாத கொரியாவின் வொன் அளவைக் கொண்ட கடன் தொகையொன்றை கொரியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்சியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. எனவே இரு தொடர்பில்  கொரியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான வரைசட்டக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டெக்பெரிஒக்சமின் மெசிலேட் இன்ஜெக்சன் NP, மில்லிகிராம் 500 குப்பிகள் 475,000  கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல்  (விடய இல. 42)

தலிசீமியா நோயை குணப்படுத்த அவசியமாகும் மேற்கூறப்பட்ட மருந்து கொள்வனவு செய்யும் விலைமனுக்கோரலினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விலைமனு தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் சிபார்சின் பெயரில் 1,413,125.00 அமெரிக்க டெலாருக்கு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீரிழிவு நோயை குணப்படுத்த அவசியமாகும் மேற்கூறப்பட்ட மருந்து கொள்வனவு செய்யும் விலைமனுக்கோரலினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விலைமனு தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் சிபார்சின் பெயரில் 1,505,000.00 அமெரிக்க டொலருக்கு வழங்குவதற்கு சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான அவசர சிகிச்சை பிரிவொன்றினை அமைத்தல் மற்றும் வைத்திய உபகரணங்களை வழங்குதல்  (விடய இல. 51)

கிழக்கு மாகாணத்தில் வாழும் நோயாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆரோக்கியமான சுகாதார சேவையினை வழங்கும் நோக்கில் இந்திய அரசின் நிதியுதவியுடன் 275 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 360 கட்டில்களுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவொன்றினையும், 10 கட்டில்கள் அடங்கிய சத்திர சிகிச்சை அறைகள் 03 உடன் கூடிய சத்திர சிகிச்சை பிரிவொன்றினையும் அமைப்பதற்கும் அதற்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை இந்திய அரசாங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வேலைப்பார்க்கும்   சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பைசல் காசிமினால் முன்வைத்த  அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீர் வழங்கல் வேலைத்திட்டங்கள் 03 இனை முன்னெடுப்பதற்காக இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடமிருந்து கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல்  (விடய இல. 52)

பின்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடமிருந்து தேவையான நிதியுதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் அதிகாரத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த  அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • அளுத்கமை, மத்துகமை மற்றும் அகலவத்தை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம் (164.9 மில்லியன் அமெரிக்க டொலர்)
  • குண்டசாலை - ஹாரகம நீர் வழங்கல் கருத்திட்டம் (146.31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 
  • பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம் (91.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்