ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய பி.பி.அபேகோனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சொத்து விபரங்களை வெளியிடாமை குறித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே!

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றில், பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கில் அபேகோன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் சொத்து விபரங்களுக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அதிகாரி ஆகியோரை சாட்சிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என, இலஞ்ச ஆணைக்குழு சார்பில் வாதாடிய சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதவான், ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி நீதிமன்றில் சமுகமளிக்குமாறு அபேகோன் மற்றும் குறித்த அதிகாரி ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டார்.