சிறிய காணிப் பரப்பொன்றை தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதற்காக 96 வயது தாயை வாட்டி வதைத்த பெண்ணை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரில், கட்டுகஸ்தோட்டை, உடுவளவ பகுதியிலுள்ள வீடொன்றை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பொலிஸார் பரிசோதனை செய்தனர்.

அப்போது, வீட்டின் புறத்தேயுள்ள அறை ஒன்றில் 96 வயதுப் பெண் வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

குப்பை, கூளங்களுடன், வாழத் தகுதியற்ற முறையில் இருந்த அந்த அறையில், மேற்படி மூதாட்டி ஒழுங்கான பராமரிப்பு இன்றியும் போதுமான ஆகாரம் வழங்கப்படாமலும் நலிந்துபோன நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், அம்மூதாட்டிக்குச் சொந்தமான சிறு காணித் துண்டொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மகளே அவரை இவ்வாறு நடத்தியிருந்தது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி, குறித்த அவரது மகள், தனது விருப்பம் நிறைவேறும் வரை தனது உடன்பிறப்புக்களான மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியையும் தன் தாயைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.