உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு  கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என சந்தையின் பெரும்பாலான வர்த்தகர்கள் ஒப்பமிட்டு  கரைச்சி பிரதேச  செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதி  இலங்கை  தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"எமது சேவைச் சந்தையின் உட்புறத்தில் உள்ளூராட்சி தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். கடந்த காலத்தில்  சேவைச் சந்தை வளாகத்திற்குள் அரசியல் கட்சிகளினால் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கோரிய போது தாங்கள் எமது சந்தை வர்த்தகர்களினதும் அவர்களது சொத்துகளினதும் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலன் கருதியும் அனுமதி வழங்காது இருந்தீர்கள். இது எமது வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

ஆனால் தற்போது தாங்கள் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களுக்கு சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக அறிகின்றோம்.

சந்தையில் பல தரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை கொண்டவர்களின் வியாபார தாபனங்கள் காணப்படுவதனால் ஒரு சில கட்சி சார்ந்து கூட்டங்கள்  இடம்பெறுகின்ற போது வியாபாரிகளுக்கு பாதுகாப்பின்மை உருவாகுவதோடு பல்வேறு அளெகரியங்களும் உருவாகலாம் எனவே வர்த்தகர்களின் நலன் கருதி சந்தையின் உட்புறத்தில் அரசியல் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு  அனுமதி வழங்குவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்."  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் க.கம்சநாதனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது  குறித்த கடிதம்  தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அது தொடர்பில் தாம் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.