சீனாவில், இணையதள விற்பனை நிலையத்தின் வினியோகஸ்தர் ஒருவர், தன் மீது புகார் அளித்த வாடிக்கையாளர் ஒருவரைத் தாக்குவதற்காக 860 கி.மீ. பயணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸியோ டீ என்ற இளம் பெண் இணையதள விற்பனை நிலையத்தில் ஆடை ஒன்றை வாங்கியுள்ளார். மூன்று நாட்களுக்குள் குறித்த ஆடை அவரை வந்தடையும் என்று அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நாளில் அவ்வாடை அவரை வந்து சேரவில்லை. இதனால், இணையதளத்தில் அப்பெண் புகாரளித்தார்.

இதையடுத்து அவரைத் தொடர்புகொண்ட வினியோகஸ்தர், ஆடையை அவரிடம் கையளிப்பதற்காக தான் வருவதாகக் கூறியதுடன், தன் மீது புகாரளித்தத அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அதை அலட்சியம் செய்த ஸியோ, தனது ஆடையை வாங்குவதற்காக வினியோகஸ்தர் கூறியிருந்த இடத்துக்கு, குறித்த நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது அங்கு வந்த குறித்த வினியோகஸ்தர், அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டு ஓடிச் செல்ல முயன்றார். எனினும் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், தபால் பொதி மூலம் குறித்த ஆடையை அனுப்பாமல், 860 கி.மீ. பயணித்து தாமே நேரில் வந்தது, தன் மீது புகாரளித்த பெண்ணைத் தாக்குவதற்காகவே என்று தெரிவித்துள்ளார்.

அவர் மீது சீனப் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.