இங்கிலாந்துப் பெண்ணொருவர் ஆண் குழந்தைக்குத் தாயானார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? தாயாவதற்கு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு முன் வரை, அவர் கர்ப்பிணி என்பது அவருக்கே தெரியாது!

லிசா லெதர்ட் (35) என்பவர் இங்கிலாந்தின் ப்ளிம்ப்டன் நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிக் (45). குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது லிசாவின் விருப்பம். ஆனால், இறைவன் கொடுக்க விரும்பினால் தடுக்க முடியுமா?

அண்மையில் ஒரு நாள், அடி வயிற்றில் கடும் வலி எடுத்ததால் வைத்தியசாலைக்குச் சென்றார் லிசா. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பிரசவ வலி எடுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஆனால் வைத்தியர்கள் கூறியதை லிசாவால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் புறத் தோற்றத்தில் அவருக்கு கர்ப்பிணிக்கான எந்தவித அறிகுறியும் இருக்கவில்லை. 

எனினும் மருத்துவர்கள் அடித்துக் கூறியதையடுத்து உடனடியாக சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு செல்ல ஒப்புக்கொண்டார். மிகச் சரியாக நாற்பத்தைந்து நிமிடங்களில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தைக்குத் தாயாரானர் லிசா!

“வலிக்குக் காரணம் இதுதான் என்று சத்தியமாக நான் நினைத்திருக்கவில்லை. வயிற்று வலி காரணமாக வேலைக்கு வர ஒரு மணிநேரம் தாமதமாகும் என்று கூறியிருந்தேன். ஆனால், மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை” என்கிறார் லிசா!