பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 5 பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலூஸ்சிஸ்தான் மாகாண முதலமைச்சர் சனாவுல்லா ஜெரி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குவெட்டா நகரிலுள்ள சட்டமன்றத்தில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஜெரி தனது பதவியைத் திடீரெனத் ராஜினாமாச் செய்ததால் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றம் கூடுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால் குவெட்டாவிலுள்ள சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இந்நிலையில் மேற்படி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் ட்ரக் வண்டியை இலக்குவைத்து தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.  இதன்போது 5 பொலிஸாரும் 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் பதவி விலகிய சிறிதுநேரத்தில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.