இந்திய மதிப்பில் சுமார் மூன்றேகால் கோடி ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகக் கடத்தி வந்த இளம் விமானப் பணிப்பெண்ணை டெல்லி பொலிஸார் கைது செய்தனர். இவரைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக்கொண்ட ‘ஹவாலா’ எனும் உண்டியல் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து நேற்று (8) அதிகாலை ஹொங்கொங் புறப்படவிருந்த ஜெட் எயார்வேஸுக்குச் சொந்தமான விமானத்தை, நிர்வாகிகள் சிலர் சோதனையிட்டனர். அப்போது, தேவ்ஷி குல்ஷேஸ்த்ரா என்ற இந்தப் பெண்ணின் பையில், அலுமினியத் தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் எண்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களில் விமானப் பணிப்பெண்ணாக ஏழு முறை வெளிநாடுகளுக்குப் பயணமான தேவ்ஷி மொத்தமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.

அவரது வீட்டில் இந்திய நாணயத்தாளில் மூன்று இலட்ச ரூபாயும் 1,600 அமெரிக்க டொலர்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.