நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட "சிங்கல்ட்றீ " உல்லாச விடுதிக்கு செல்லும் காட்டுப்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரை இனந்தெரியாத சிலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவ்விடத்திலிருந்து தப்பிசென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று  பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் உக்ரைன் நாட்டை சேர்ந்த 18 வயதான எலிசபெத்பரி  என தெரியவந்துள்ளது. இவர் உல்லாச வீசாவில் இலங்கைக்கு வந்து நுவரெலியாவை பார்வையிட வந்துள்ளார்.

இப்பெண் ஞாயிற்றுகிழமை பகல் வேளையில் நுவரெலியா பதுளை வீதி பகுதியில் அமைந்துள்ள  கல்வி  திணைக்களத்திற்கு மேல் திசை பகுதியில் காணப்படும்  உயரமான பகுதியில் அமைந்துள்ள "சிங்கல்ட்றீ"  உல்லாசவிடுதிக்கு செல்லும் காட்டுப்பகுதியில் தனிமையில் சென்றுள்ளார்.

இதன்போது இந்த யுவதியை பின்தொடர்ந்ததாக சொல்லப்படும் இனந்தெரியாத நபர்களால் இவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பொலிஸ் முறைப்பாட்டை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில்  முறைப்பாட்டை பதிந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணையை செய்துவருவதுடன் பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மகபேற்று வைத்திய நிபுணர் ஊடாக வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்படுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.