நாட்டுக்கு எழுச்சி ! மொரகஹகந்த நீர்த்தேக்கம் மக்களின் பாவனைக்கு

Published By: Priyatharshan

08 Jan, 2018 | 12:38 PM
image

நான்கு

தசாப்தங்களின் பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் மொரகஹகந்த அபிவிருத்தி திட்ட வளாகத்தில் இடம்பெற்றது.

மகாவலி இயக்கத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு இடம்பெறும் அரச விழா அதனோடு இணைந்ததாக ஜனாதிபதியின் தலைமையில் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மகாவலி பெருந்திட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் பயணத்தில் முதலாவது திட்டமாக பொல்கொல்லை போவத்தென்ன அணைக்கட்டு நிர்மாணப்பணிகள் பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் அப்போதைய காணி, நீர்ப்பாசன மின்சாரத்துறை அமைச்சர் சீ.பி.டி.சில்வா ஆகியோர்களினால் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

3 இலட்சம் ஏக்கர் காணிகள் புதிதாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நன்மையளிக்கும் அதேநேரம் மூன்று இலட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டலின் பேரில் துரிதப்படுத்தப்பட்டதுடன், இது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமாகும்.

இந்நீர்த்தேக்கத் திட்டத்தின் மொத்த நீர் கொள்ளளவு 660,000 ஏக்கர் அடிகளாகும் என்பதுடன் இது பராக்கிரம சமுத்திரத்தை பார்க்கிலும் 6 மடங்கு நீரைக் கொண்டதாகும். தற்போது இந்நீர்த் தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவில் நூற்றுக்கு 99 வீதம் நீரினால் நிறைந்துள்ளது.

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களில் 2000 குளங்களுக்கு புதிய நீர் கிடைக்கவுள்ளது. அந்தவகையில் வடமேல் மாகாணத்தில் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தில் 1600 குளங்களுக்கும் நீரை வழங்குவதுடன் நவ லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நகரம் மற்றும் புதிய குடியேற்றங்களிலும் 48 புதிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்தின் காரணமாக நாவுல, லக்கல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருவதுடன், சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நீர்த் தேக்கத்தில் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பதியின் அளவு வருடாந்தம் 3000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் வருடாந்தம் 225 மில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார முறைமையுடன் சேர்க்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 336 மில்லியன் ரூபா எரிபொருள் மீதப்படுத்தப்படவுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்ததாக வருடாந்தம் கிடைக்கும் மழை 818 மில்லியன் கனமீற்றராகும் என்பதுடன் இந்நீர்த்தேக்கத்தின் மூலம் மன்னம்பிடிய, சோமாவதிய பிரதேசங்களில் வருடாந்தம் ஏற்படும் வெள்ள நிலைமையை பெருமளவு குறைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மூன்று மாகாணங்களில் வாழும் ஆயிரக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த - களுகங்கை திட்டத்தின் மூலம் முழு தேசத்திற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்