யுனைட்டட் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று, பயணியின் அருவருக்கத்தக்க செயலால் திடீரெனத் தரையிறக்கப்பட்டது.

சிக்காகோவில் இருந்து ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்ட இவ்விமானம் நடுவழியில், பயணி ஒருவரின் அசிங்கமான செயலால் அலாஸ்கா விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கவேண்டியதாயிற்று.

குறித்த விமானத்தின் கழிவறைக்குச் சென்ற அந்தப் பயணி, மனிதக் கழிவுகளை அந்தக் கழிவறை முழுவதும் பரவி விட்டிருந்தார். விமானத்தின் மற்றொரு கழிவறையிலும் இதே போன்று அசிங்கமாக நடந்துகொண்டார்.

மேலும், தனது சட்டையைக் கழற்றி கழிவறையின் துவாரத்தினுள் அடைத்தும் வைத்திருந்தார்.

தற்செயலாகக் கழிவறைக்குச் சென்ற மற்றொரு பயணி அதிர்ச்சியடைந்து விமானச் சிப்பந்திகளிடம் முறையிட்டார். அதையடுத்து, சுத்தம் செய்வதற்காக விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.

குறித்த செயலைச் செய்த பயணியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர் மன நிலை தடுமாறியவராக இருந்ததை அறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விமானத்தின் ஏனைய பயணிகள் தற்காலிகமாக ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, விமானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.