பெண் வேட்பாளர்களை அச்சுறுத்த முயற்சிக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளார். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டால், அது தமது அரசியல் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளும் ஒரு முயற்சியாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பெண் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.

மேலும் புத்தளத்தில், பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பகிரங்கமாக ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்ததாகவும் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் ஆராய இரண்டு தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஆணையாளர், பெண் வேட்பாளர்கள் சுதந்திரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் திணைக்களம் எவ்வித தயக்கமும் காட்டாது என்று எச்சரித்துள்ளார்.