தேசிய விளையாட்டு விழாவிலிருந்து உடல் கட்டழகர் போட்டியை நீக்கிவிடவேண்டும் என்று இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் அர்ஜுன டி சில்வா வலியுறுத்தினார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இந்த கோரிக்கையை அவர் விடுத்தார்.
உடல் கட்டழகர் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் பெற்றுக்கொள்ளும் மேலதிக போஷாக்குகளில் ஊக்கமருந்துக்கு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய வைத்தியர் அர்ஜுன டி சில்வா, மேலும் ஊக்கமருந்து சோதனைகளை நடத்த வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு இந்த விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஊக்கமருந்து பாவனையை தடுப்பதற்கு நாம் தவறிவிடுகிறோம் என்றார். இதேவேளை சிறுவர்களும் இதன் மூலம் தேவைக்கு அதிகமான போஷாக்குகளைப் பெற்றுக்கொள்வதால் அவர்களுக்கு காலம் செல்ல செல்ல பின் விளைவுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இல்லாத ஒரு விளையாட்டை தேசிய விளையாட்டு விழா போட்டி அட்டவணையில் இணைப்பதும் உகந்ததல்ல என்றார்.
இலங்கையில் எந்தப் போட்டியானாலும் சரி வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுக்கவே நாம் முயற்சித்துவருகிறோம். அதனால் உடல் கட்டழகர் போட்டிகளை விளையாட்டுப் போட்டிகள் அட்டவணையிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று அர்ஜுன டி சில்வா வலியுறுத்தினார்.