இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக் முடியாது தடுமாறியது.

தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 12 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது அதன்முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் 3 பேரை இழந்திருந்தது.

இருப்பினும் ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் டூபிளஸிஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாபிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டது.

ஏபிடி 65 ஓட்டங்களுடனும் டூபிளஸிஸ் 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த குயின்டன் டீ கொக் தன் பங்கிற்கு 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்த பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கி இந்திய அணி தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறியது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு நிலைகுலைந்த இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

புது மாப்பிள்ளை விராட்கோலி 5 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். முரளி விஜய் ஒரு ஓட்டத்துடனும் தவான் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பிலேந்தர், ஸ்டெய்ன்  மற்றும் மோர்கல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இன்னு போட்டியில் 2 ஆவது நாள் இந்திய அணி சார்பாக ஆடுகளத்தில் புஜாரா 5 ஓட்டத்துடனும் ரோகித் சர்மா ஓட்டமெதனையும் பெறாது உள்ளனர்.