ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றூலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணி 4 ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரை பாகிஸ்தானுடன் விளையாடி வருகின்றது.

Jems

இந்நிலையில், நேற்று நடந்த 3 ஆவதும் தீர்மானமிக்க ஒரு நாள் போட்டியில் 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் 54 பந்துகள் மீதமிருக்க 209 என்ற வெற்றியிலக்கை இங்கிலாந்து அணி ஜெம்ஸ் டெய்லரின் அரைச்சதத்துடன் இலகுவாக அடைந்தது.

ஷார்ஜா கிரிக்கட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய நீர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருக்க சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை குவித்தது. இதில் பாகிஸ்தான் சார்பாக துடுப்பாட்டத்தில் மொஹமட் ஹாவிஸ் 45 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கட்டுக்களை பெற்றார்.

209 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 41 ஓவர்களில் 4 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் இங்கிலாந்து சார்பாக ஜெம்ஸ் டெய்லர் 67 ஓட்டங்களை குவித்தார். பாகிஸ்தான் சார்பாக பந்துவீச்சில் அறிமுக பந்துவீச்சாளர் ஜாபர் கோஹர் 2 விக்கட்டுக்களை பெற்றார்.

4 ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரை இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் வென்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜெம்ஸ் டெய்லர் தெரிவானார்.