வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை  ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற பணிப்பகிஸ்கரிப்பு நான்காவது நாளாகவும் இன்று  தொடரும் நிலையில் மன்னார் மாவட்ட ஊழியர்களும் நான்காவது நாளாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட  மத்திய பஸ் நிலையத்தில் அரச தனியார் போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுமாறு வடக்கு முதலமைச்சர் பணித்திருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த முதலாம் திகதி  காலை முதல் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் கடந்த நான்கு நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மன்னார் மாவட்ட மக்கள் நான்காவது நாளாகவும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் விசேட போக்கு வரத்துச் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் பாடசாலை மாணவர்கள், அலுவலகர்கள், அதிகாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு  அசௌகரியங்களுக்கு  முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னாரில் இருந்து மக்கள் தனியார் பஸ்கள் மூலம் நீண்ட நேரம் காத்திருந்து தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.