உண்ணத் தகாத நிறமூட்டியை ஜிலேபியில் கலந்தவருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை, 22 வருடங்களுக்குப் பின் அமுல்படுத்தப்படவிருக்கிறது. காரணம், நீதிமன்ற உத்தரவு நகல் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெறாததே!

இந்த வித்தியாசமான செய்தி இந்தியாவின் சாஜன்பூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

சாஜன்பூரின் மொஹம்மதி நகரில் ஒரு ஜிலேபிக் கடை இயங்கிவந்தது. அங்கு தயாரிக்கப்படும் ஜிலேபிகளில், உண்ணத் தகாத நிறமூட்டி கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து, 1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சந்தேக நபரின் கடையில் இருந்த ஜிலேபியின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனையில், மனிதர்கள் உண்ணத் தகாத நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. விசாரணை இறுதியில், அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 3 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் 1996ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இத்தீர்ப்பின் நகல் மொஹம்மதி நகர பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்படாததால், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சுமார் 22 வருடங்களுக்குப் பின், இந்த விவகாரம் தற்செயலாகத் தெரியவந்ததையடுத்து, அதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.