இன்டெல், ஏ.எம்.டி. மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும் கணினிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் பல இருப்பதாக கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘அல்ஃபபட்’ மற்றும் கூகிள் ‘ஸீரோ ப்ரொஜெக்ட்’ ஆகியன நிறுவனங்களின் ஆய்வாளர்களது ஆய்வில் இருந்தே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இக்குறைபாடுகளால், மேற்படி நிறுவனங்களின் சிப்கள் பொருத்தப்பட்ட கணினிகளில் இருந்து தகவல்களை எளிதாகத் திருட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணினிகள் மட்டுமன்றி, இவ்வகை சிப்கள் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள், டெப்லட்கள், இணையதள சேர்வர்கள் என்பனவற்றில் இருந்தும் இதேபோன்று தகவல்களைத் திருட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டிருக்கும் இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. ஆகிய நிறுவனங்கள், இத்தவறு சிப் தயாரிப்பில் ஏற்பட்டதல்ல என்று வலியுறுத்தியுள்ளன.

மேலும் தமது சிப்களைப் பொருத்தியிருக்கும் கணினி மற்றும் ஏனைய கருவிகளைப் பயன்படுத்துவோர், இணையத்தில் இருந்து ‘பெட்ச்’ (திருத்த) கோப்பு ஒன்றைத் தரவிறக்கிப் பதிவுசெய்துகொள்வதன் மூலம், இத்தவறைச் சரிசெய்யலாம் என்றும் அதன்மூலம் தமது தரவுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளன.