இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை அலுவலகத்தின் அதிகாரிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்திரையாடலின் போது தனியார் சிற்றூர்தி சங்கத்தினரும் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடல் முடித்துக்கொண்டி வெளியேறிய முதலமைச்சர் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தான் சார்ந்த கருத்துக்களை தனது செயலாளர் தெரிவிப்பார் என்று கூறி முதலமைச்சர் அங்கிருந்து புறப்படுச் சென்றார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் சார்பில் அவரின் செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் புதுதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையத்தை இயங்க வைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் இ.போ.ச தலமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது முக்கியமாக 3 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் இ.போ.ச மற்றும் தனியார் சிற்றூர்தியினர் இணைந்த நேர அட்டவணைக்கு ஏற்ப்ப ஒரே வரிசையில் நின்று சேவையாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்று (நேற்று) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அத் தீர்மானத்தில் சிறிது தளர்வு செய்யப்பட்டது. குறிப்பாக தூர சேவைக்கான இணைந்த நேர அட்டவை தயாரிக்கும் வரையில் இரு பகுதிதினருக்குமான உள்ளூர் சேவைகள் இணைந்த நேர அட்டவணையின் படி தனித்தனியாக நடைபெற தீர்மாணிக்கப்பட்டது. இத் தீர்மானம் இரு பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தின் அடிப்படையில் இன்று (நேற்று) மாலை 2 மணியிலிருந்து வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று ஏனைய மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வரும் பஸ்கள் வவுனியா பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்குதல், ஏற்றுதல் போன்ற சேவையில் ஈடுபடுவது தொடர்பில் இணக்கம் எட்டப்படவில்லை.

இதனால் வெளி மாகாணங்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியில் நின்று பயணிகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயத்திலும் இணக்கம் காணப்பட்டது.

மேலும் பஸ் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் நன்மை உடனடியாக இல்லா விட்டாலும் கருதி பஸ் தரிப்பிடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம் முடிவுகள் அனைத்தும் தற்காலிகமாகவே எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாகாண சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கும் வரையே இவ் முடிவுகள் நடமுறையில் இருக்கும்.

நாளை மறுதினம் 5 ஆம் திகதி தூர பஸ் சேவைக்கான நேர அட்டவணை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இரு தரப்பினர்களும் தமது சங்கங்களில் கலந்துரையாடி எதிர்வரு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து சீரான பயணிகள் சேவை இடம்பெறும் என்றார். இதேவேளை பஸ் நிலையம் இரு தரப்பினர்களின் பாவனைக்கு பகிர்ந்து வளங்கப்பட்டாலும், எல்லைகள் பிரிக்கப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்படடாது என்றார்.