தனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த ரஜினி, கருணாநிதியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.

கருணாநிதியைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பாகவே அது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்தை ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ரஜினிகாந்த் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய ரஜினி, வழக்கம் போலவே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கட்சி ஆரம்பித்ததையடுத்து தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். மேலும் அவரது உடல் நிலை குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று திமுகவினர் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர்.