வவுனியா பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து, வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்த முடியாதுள்ளது எனக் கூறி இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்தைச் சேர்ந்த ஊழியர்கள் புத்தாண்டு தினத்தன்று பணிப்புறக்கணிப்பில் இறங்கினர்.

பணிப்புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று (3) கொழும்பில் இருந்து வவுனியா வந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் வடமாகாண முதலமைச்சரை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்போது, வவுனியா பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகளுக்கு வவுனியா பேருந்து நிலையத்துக்குச் செல்ல அனுமதியில்லை என்றும் இணைந்த சேவையின் கீழ் தற்போதுள்ள 40 சதவீதம் இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும்  60 வீதம் தனியாருக்கென்றும் வரைபு ஒன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

அந்த வரைபின் ஊடாக இரு போக்குவரத்துச் சேவையினரும் தமது சேவைகளை நடத்த வேண்டும் எனவும் அதேநேரம் வெளிமாவட்டங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வசதியாக பிறிதொரு பேருந்து தரிப்பிடத்தை அமைப்பதற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, பிற்பகல் 2.00 மணியளவில் பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டது.