பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மாக்கிலின் திருமண நிகழ்வின்போது சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டப்படுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அவரது காதலியான மேகன் மாக்கிலுக்குமான திருமணம் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வின்ட்சர் கோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமண வைபவத்தால் பிரித்தானியப் பொருளாதாரத்துறையில் சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் திருமணத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் விடுதிகளில் தங்குவதன்  மூலம் 200 மில்லியன் பவுண்ட் நிதியும், மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் சுமார் 150 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியும், விளம்பரங்கள் செய்வதன் மூலம் சுமார் 100 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியும் வருமானமாகக் கிடைக்கும்.

இது தவிர இவர்களின் திருமண ஞாபகார்த்தச் சின்னங்களான டீசேர்ட்கள், தொப்பிகள், தேநீர்க் குவளைகள் உள்ளிட்டவையின் விற்பனை மூலம் சுமார் 50 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியும் கிடைக்குமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இவர்களின் திருமண நிகழ்வு காரணமாக சுற்றுலா வர்த்தகமும் வளர்ச்சியடையுமெனவும் பிரித்தானியப் பொருளாதாரத்துறை  கூறியுள்ளது.