தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்து வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்றையதினம் ஒட்டுசுட்டான் சிவநகர் கிராமத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்  அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

தமிழரசுக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மக்களிடம் அரச கட்சிகளுக்கு பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்கதீர்கள் என கூறுகின்றார்கள்.

ஆனால் அவர்களோ தமிழ் மக்களின் ஆணையை பெற்று அதிகாரத்துக்கு வந்து இன்று அந்த பேரினவாத கட்சிகளுடன் இணைந்து ஒத்துப்போகின்றார்கள். தமிழ் மக்களின் நலனில் சற்றும் அக்கறை இல்லாது செயற்படுகின்றார்கள். 

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணையை பெற்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறி பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த வாக்குறுதிகளை அனைத்தையும் மறந்து இன்று தமது தனிப்பட்ட நலன்களுக்காக அரசாங்கத்துக்கு விலை போயுள்ளார்கள். இந்த தேர்தலுக்கு பிற்பாடு தெற்கில் மாற்றங்கள் வரும் என எதிர் பார்க்கபடுகின்றது. எம்மை பொறுத்த வரையில் தென்பகுதியில் மட்டுமல்ல வட,கிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இந்த அரசால் நிராகரிக்கபட்டிருக்கின்றது. அரசியல் கோரிக்கைகள் முக்கியமாக வட கிழக்கு இணைப்பு என்பது நிராகரிக்கபட்டிருக்கின்றது.  தமிழ் மக்கள் சார்பாக பேசுகின்ற சம்பந்தனோ ,சுமந்திரனோ வழிகாட்டுதல் குழுவில்  வடகிழக்கு இணைப்பு பற்றி பேசவில்லை என பிரதமர் ,ஜனாதிபதி ஆகியோர் சொல்கின்றார்கள்.

ஆகவே வடகிழக்கு இணைப்பு என்ற அடிப்படை பிரச்சினை அரசாங்கத்தால் ஏற்றுகொள்ளப்படவில்லை அதுமாத்திரமல்ல சமஷ்டி என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, சுமந்திரன் அடிக்கடி கூறுகின்றார் நானும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இடைக்கால அறிக்கையை வாசிக்காது கருத்து வெளியிடுகின்றோம் என நாம் அதனை முழுமையாக வாசித்திருகின்றோம். அவருக்கு ஐயமாக இருந்தால் நாமும் அவருடன் நேரடி விவாதங்களுக்கு செல்லத் தயாராக இருக்கின்றோம் . எனவே அவர் இவ்வாறன கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்.

ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் இன்று பௌத்தத்திற்கு முதலிடம் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பால் ஏற்கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் அரசால் நிராகரிக்கபட்டுள்ள இந்த கால சூழலில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு மாற்று வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.  மாற்றுத் தலைமை என்பது எந்த தேர்தலின் ஊடாக உருவாக வேண்டும். அதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். இப்பொழுது உதயசூரியன் சின்னம் என்பது ஒரு பொது சின்னமாக அதில் கலந்துகொண்டுள்ள ஐந்து அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளபட்டிருக்கின்றது.  ஆகவே இந்த உதயசூரியன் சின்னமூடாக ஒரு மாற்றத்தை உருவாக்க நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். அந்த வகையில் முழுமக்களும் எமக்கான ஆதரவை தரவேண்டும்.

அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் எமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடாக இரண்டு அரசியல்வாதிகள் தெரிவாகியிருந்தார்கள். ஒருவர் பாராளுமன்றத்துக்கும் மற்றையவர் மாகாணசபைக்கும் தெரிவாகியிருந்தார்கள் . இரண்டுபேருமே தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்கள். அதுமாத்திரமன்றி வைத்தியதுறையில் கல்வி கற்று வைத்தியராக பணியாற்றியவர். தற்போது ரௌடி தனம் புரிவதும் பெண் வேட்பாளர்களை கடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல், இவ்வாறானவர்கள் எமது கட்சி ஊடாக வந்து சென்றார்கள் என்பது அருவருக்கத்தகதாக இருக்கின்றது .

ஆகவே இவர்கள் தங்களின் தேவைகளுக்காக விடுதலைப்புலிகளின் தலைவரை துணைக்கு அழைப்பதும் அவர்காட்டிய வழியில் நான் செல்கின்றேன் என தெரிவிப்பதும் எல்லோரையும் கேவலப்படுத்தும் செயல். இவ்வாறான தவறான அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு புதிய மற்றம் உருவாக மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தலுக்கு பிற்பாடு தமிழரசுக் கட்சியுடன் இருகின்ற ஏனைய கட்சிகளும் எம்மோடு இணைவதை தவிர மாற்று வழியில்லை எனவே அதனை சரியாகப் பயன்படுத்த மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்கவேண்டும் என கேட்டுகொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.