நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி மழை காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டது.

நியூசிலாந்தின் மவுண்ட் மவுன்கனுயில் இரு அணிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பமாகியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 102 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது.

அப்போது கேன் வில்லியம்சன் 17 ஓட்டங்களுடனும் கிட்சென் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய காலின் மன்றோ 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அவர், தனது அரைச் சதத்தை 18 பந்துகளில் கடந்திருந்தார். இதன் மூலம் விரைவாக அரைச் சதம் எடுத்திருந்த தனது சொந்த சாதனையையே அவர் சமன் செய்தார்.
போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாதென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது போட்டி நாளை இடம்பெறவுள்ளது.