எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் மூன்றாவது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார் என சட்டமன்ற உறுப்பினரான ரி ரி வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் காணாமல் போய்விடுவார் என்று எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் சொன்னார்கள். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. இப்போது அவர்கள் தான் காணாமல் உள்ளனர். நாளை (3ஆம் திகதி ) ஆர்.கே. நகர் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். என்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக மூன்று மாதத்துக்கு பிறகு தினகரன் காணாமல் போய் விடுவார் என்று கூறியுள்ளார்கள். அந்த வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சந்தித்து வெற்றி பெறுவேன். 

எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆட்சி,அதிகாரம் மட்டுமே உள்ளது. அதுவும் மிக விரைவில் கானல் நீராக போகும். தொண்டர்களின் பலம் எங்களிடம் உள்ளது. கட்சி எங்கள் வசம் தான் உள்ளது. துரோகத்தால் பறிபோன இரட்டை இலை சின்னம் மிக விரைவில் எங்கள் பக்கம் வரும். எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா வழியில் எங்களின் ஆட்சி இனி நடைபெறும். அ.தி.மு.க.வின் மூன்றாவது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார். அது சரித்திர வெற்றிகளை குவிக்கும் அத்தியாயமாக தான் இருக்கும்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்