நுவரெலியாவில் முச்சக்கரவண்டியில் வந்தோரால் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியாலிலுள்ள தனியார் வங்கியொன்றில் இன்று காலை வைப்பிலிடச்சென்ற ஒரு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பணமே கொள்ளையிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலுள்ள சிகரெட் முகவர் வியாபார நிலையமொன்றின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வங்கியில் வைப்பிலிடுவதற்காக குறித்த சிகரெட் முகவர் வியாபார நிலையத்தினர் பணத்துடன் சிறிய ரக லொறியொன்றில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த லொறி நுவரெலியாவின் பூங்கா வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் வந்த இருவர்,  லொறியை வழி மறித்து, அதிலிருந்த சாரதி மற்றும் வியாபார நிறுவனத்தின் காசாளர் மீது மிளகாய் தூளை  தூவிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.