வட மாகாண முதலமைச்சரினால் வவுனியா பழைய பஸ் நிலையம் நேற்று அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ளூர்  பேரூந்து சேவைகளையாவது மேற்கொள்ள வேண்டுமென மத்திய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்துவருகின்றனர்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள் அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச. பேரூந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேரூந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும் பயணிகளின் நலன் கருதி பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து புதிய பேரூந்து நிலையம் வரை இலவச பேரூந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.