வனஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தேவையான வளங்களை குறைவின்றி பெற்றுக்கொடுத்து அதனை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அந்த வகையில் இன்று பல பிரதேசங்களில் மக்கள் முகங்கொடுத்துள்ள காட்டு யானைகள் பிரச்சினைக்கு எதிர்காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவை வெஹரகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் வளப்பற்றாக்குறை காரணமாக யானைகளுக்கான வேலிகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடந்த காலத்தில் தாமதமடைந்திருந்ததுடன் அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைப் போன்று புதிய பிரதேச சபை தாபிக்கப்படுவதுடன் கிராமிய அபிவிருத்தியில் புதியதோர் திருப்பம் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான நிதியில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது உள்ளூராட்சி நிறுவனத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்படும் பிரநிதிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

நாட்டின் விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் முக்கிய நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நெல்லுக்கு இதுவரை கிடைக்காத கூடிய விலை விவசாய சமூகத்திற்கு கிடைக்கப் பெற்றது தற்போதைய அரசாங்கத்திலேயே ஆகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திம்புலாகல அலவத்துகும்புற பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி  கலந்து கொண்டார்.

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களுக்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அலவத்துக்கும்புற பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அத்தொகுதியில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகரான புலஸ்தி இந்திக ஜனாதிபதிக்கு கௌரவமளிக்கும் வகையில் இந்த மேடையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ஜயந்த மாறசிங்க, என்.வீ. ஷமந்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.