புதுவருடம் நாளை (1) பிறக்கவிருக்கும் நிலையிலும் வர்த்தகம் களையிழந்து போயிருப்பதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள நகர சபைக்குச் சொந்தமான இடத்தில் அங்காடி வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

என்றபோதும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட இவர்கள் நகரசபைக்கு முன்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளதால் புதுவருட தினத்திற்கான தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.