நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகள் தேர்தல் குறித்தவை என்றும் 17 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேர்தல் சுவரொட்டிகளை அனுமதியின்றி ஒட்டுதல், பதாகைகளை அனுமதியின்றிக் காட்சிப் படுத்தல், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தல் மற்றும் வாகனங்களில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரங்களை ஒட்டுதல் என்பன குறித்தே அதிகளவு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடுகளின் பேரில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.