சைட்டம் மருத்துவக் கல்லூரியால் மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டவர்களை ஐந்து வார மருத்துவப் பயிற்சிக் காலத்துடன் ஏற்று அங்கீகரிப்பதற்கு இலங்கை மருத்துவச் சபை ஒத்துக்கொண்டுள்ளது.

இத்தகவலை, இன்று (30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அமைச்சர், மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

“கடந்த எட்டு மாதங்களாக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம் தோற்றுப் போனது அவர்கள்தானே தவிர வேறெவரும் இல்லை. இந்தப் புறக்கணிப்பின் மூலம், அவர்கள் ஏறக்குறைய ஓராண்டு காலம் தமது சேவை அனுபவத்தை இழந்துள்ளனர்.

“சைட்டம் கல்லூரியால் வழங்கப்பட்ட பட்டத்தை அங்கீகரிக்க இலங்கை மருத்துவர்கள் சங்கம் நேற்று (29) தீர்மானித்துள்ளது. இத்தனை மாதங்களாக நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தேவையற்றது என்று இதன்மூலம் தெரியவந்துள்ளது.”

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.