சிறிலங்கன் எயார்லைன்ஸ்  விமானசேவையை "கட்டார் விமான சேவைக்கு" கையளிக்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குவதால் "அதிகாரிகள் மட்டத்திலான" மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் கூறுகையில், 

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. எனவே இச் சேவையில் அதிகாரிகள் மட்டத்திலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அதேவேளை இந்த விமான சேவையை கொண்டு நடத்த திறைசேரியிடமிருந்து நிதியை பெற்றுக் கொடுக்குமாறும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதோடு, அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இது தான் உண்மையாகும்.  அதை விடுத்து  நிறுவனத்தை கட்டார் விமான சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கான எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வெ ளியான செய்திகளில் உண்மையில்லை என்றார்.