பழைய ஜெருசலேம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதையுடன் ரயில் நிலையத்தை அமைத்து அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரைச் சூட்ட இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் யிஸ்ரேல் காட்ஸ் முடிவு செய்துள்ளார்.

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கௌரவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் நேற்று கூறியுள்ளார்.

மேற்குச்சுவர் என்பது யூதர்கள் வழிபடும் புனித இடமாகும். இதற்கு அருகில் சுரங்கப்பாதையுடன் ரயில் நிலையத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல் அவிவ் நகரிலிருந்து அதிவேக ரயில் போக்குவரத்து விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய ரயில்வே சுரங்கப்பாதையுடன் ரயில்வே நிலையம் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதுடன் இந்தச் சேவை அடுத்த வருடம் ஆரம்பமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமைக்கவுள்ள இந்த ரயில் சேவை விரிவாக்கமானது போக்குவரத்து அமைச்சின் மிக முக்கிய தேசிய திட்டமென்பதுடன் மேற்கு ஜெருசலேமிலுள்ள பின்யெனாய் ஹாஉமா நிலையத்திலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள மேற்குச்சுவர் பகுதிவரை 3 கிலோமீற்றர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க இஸ்ரேலிய ரயில்வே ஆணையகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பழைய ஜெருசலேம் நகரை உலக பாரம்பரிய இடமாக அறிவித்த ஐ.நா.வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அந்த இடத்தைத் தோண்டி சுரங்கப்பாதை அமைப்பதற்கு கவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இம்மாதம் 6ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.