துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்தான்புல்லிலுள்ள Fatih எனும் பல்கலைக்கழக ஊழியர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி பல்கலைக்கழக ஊழியர்கள் 171 பேரைக் கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், இதுவரையில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

துருக்கிய ஜனாதிபதி தையிப் ஏர்டோகனை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலன் முற்பட்டதாக துருக்கிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. இருப்பினும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இதனையடுத்து துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர்கள், அரசாங்கத் தொழிலாளர்கள் உட்பட 50,000 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 150,000 பேர் தங்களது வேலைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கவிழ்ப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு Fatih பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.