டிசம்பர் மாதம் ஆரம்­பித்­து­விட்டால் சுனாமிப் பேர­லையின் ஞாப­கங்­களும் அதனைத் தொடரும் அதிர்­வ­லை­களும் கடந்த ஒரு தசாப்த கால­மாக இலங்­கையில் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன.

உலகம் தோன்­றிய காலம் முதல் அவ்­வப்­போது இயற்­கையில் பல மாற்­றங்­களும் அதனால் சிறிய மற்றும் பாரிய அள­வி­லான அழி­வு­களும் நடந்­தே­றியே வரு­கின்­றன.

இலங்கையைப் பொறுத்­த­மட்டில் குறிப்­பாக 2004 சுனாமி அனர்த்­தத்­தினால் அதிகம் காவு கொள்­ளப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சங்­களில் நவம்பர் ஆரம்­பித்து டிசம்பர் அண்­மித்து விட்டால் ஒரு­வி­த­மான கிலி பரவி வதந்­தி­க­ளுக்கும் பஞ்­ச­மில்­லாத்­தன்மை முளை­விடத் தொடங்­கு­கின்­றன.

கடந்த பல தசாப்­தங்­க­ளுக்கு முன்­னி­ருந்தே இலங்­கையின் காலநிலையில் ஒக்­டோபர் முதல் டிசம்பர் வரை­யான காலப்­ப­கு­தியில் அதி­க­ரித்த மழையும் கட்­டுக்­க­டங்­காத வெள்ளமும் மண்­ச­ரிவும் ஏற்­பட்டே வந்­தி­ருக்­கின்­றன. வங்­காள விரி­கு­டாவை மையப்­ப­டுத்தி தாழ­முக்க எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டு­வதும் பெரும் பாலும் அவை இந்­தி­யாவை நோக்கி நகர்­வ­துடன் அதன் அதிர்­வு­க­ளாக பலத்த காற்றும் மழையும் பெய்­வதும் தொட­ராக நடை­பெற்றே வந்­தி­ருக்­கின்­றன.

2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு ஓரிரு தினங்­க­ளுக்கு முதல் அதி­க­ரித்த மழை­யினால் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வெள்ளம் ஏற்­பட்­ட­துடன் தாழ­முக்க எச்­ச­ரிக்கை வழமை போல் விடுக்­கப்­பட்டு சூறா­வ­ளியை எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யி­லேயே ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் ஏப்பம் விட்டுச் சென்ற சுனாமி ஏற்­பட்­டது.

கி.பி. 3 ஆம் நூற்­றாண்­ட­ளவில் வாழ்ந்த வச்­சி­ர­நந்தி என்ற முனிவர் ஒரு­வர்­ இ­றை­யனார் கள­வி­ய­லுரை என்னும் நூலை எழு­தினார். இதில் கி.பி. 1 ஆம் நூற்­றாண்­டுக்கு முன் நமது முன்­னோரால் பாது­காக்­கப்­பட்ட சங்­கங்­களும் அத­னோடு இணைந்த ஆவ­ணங்­களும் ஆழிப்­பே­ர­லையால் காவு கொள்­ளப்­பட்­டன எனக்­கு­றிப்­பி­டு­கின்றார்.

வச்­சி­ர­நந்­தியால் குறிப்­பி­டப்­படும் ஆழிப்­பே­ர­லையே சுனா­மி­யாகும் என்­பதால் இது காலத்தால் முற்­பட்ட சொல் வழக்­கையும் சம்­ப­வப்­ப­தி­வையும் உடை­யது என்­பது தெளிவு.

ஆனால் 2004 இல் சுமாத்­தி­ராவில் ஏற்­பட்ட நில அதிர்வு கடல்­கோ­ளாக மாறி சுனாமி என்ற பெயரை எடுக்கும் வரை இலங்கை மக்­க­ளுக்கு இச் சொல்­லாடல் புதி­ய­தாகும். சுனா­மி­யினால் கிழக்கு மாகா­ணத்தின் பொத்­து­வில் -­உல்­லையில் இருந்த பாதிக்­கப்­பட்ட ஹோட்டல் ஒன்றை மீட்­புப்­ப­ணி­யா­ளர்கள் சுத்தம் செய்த போது சுனாமி ஹோட்டல் என்ற பெயர்ப்­ப­லகை கண்­டெ­டுக்­கப்­பட்­டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்­த­வர்­களால் இது நடத்­தப்­பட்­ட­தாக பின்னர் அறி­யப்­பட்­டது. இவ்­வி­டயம் எமது நாட்­ட­வர்­க­ளுக்கு ஆச்­ச­ரியம் அளித்­த­போ­திலும் ஜப்பான் ்மக்களுக்கு பழக்­கப்­பட்ட ஒன்­றா­கவே இருந்­தது. அவர்கள் மொழி­யி­லான சொல்லே சுனா­மி­யாகும். திரைப்­ப­டங்­களில் இச் சொல்­லாடல் உச்­ச­ரிக்­கப்­பட்ட போதும் 2004 டிசம்பர் 26 இல் தான் இது யதார்த்­த­மா­கி­யது.

நில நடுக்­கத்­தினால் ஏற்­படும் தாழ்­நில அதிர்வு கட­ல­டித்­தட்­டுக்­களைத் தாக்கும் போது ஏற்­படும் ஓர் உட­னடி நிகழ்வே கடல்­கோ­ளாகும். அது முன்­கூட்­டிய திட்­ட­மி­டலின் வெளியா­குகை அல்ல. 2004 ஆம் ஆண்டு கடல் கோள் ஏற்­ப­டு­வ­தற்கு ஒரு சில தினங்­க­ளுக்கு முன் அதி­சய கால்­க­ளுடன் கோழி-­ம­னித முகத்தில் ஆடு, -­கோ­டிக்­க­ணக்­கான சூரை இன மீன்கள் பிடி­பட்­டமை போன்ற சில சம்­ப­வங்கள் அம்­பாறை மாவட்­டத்தில் நடந்­தே­றின.

இவை­களை வைத்துக் கொண்டு தொட­ராக நிகழும் சில சம்­ப­வங்கள் சுனாமி அனர்த்­தத்­திற்­கு­ரிய எச்­ச­ரிக்­கை­யாகக் கொள்ள முடி­யாது.

சுனா­மியின் பின்னர் ஏற்­பட்ட சடு­தி­யான கால நிலைத்­த­ளம்­ப­லி­லி­ருந்து இலங்கை இன்னும் விடு­ப­ட­வில்லை என்­பது உண்­மை­யாகும். காலஞ்­சென்ற விஞ்­ஞான முறை­யி­ய­லாளர் ஆதர் சி.கிளாக் இலங்­கையின் கால நிலை சுனா­மிக்குப் பின்னர் தடு­மாற்­ற­மா­கி­யுள்­ளது(Disorder). வெப்ப நிலைப்­பி­ர­தே­சங்கள் கூட பனிப்­பொ­ழி­வுள்ள இட­மாக மாறலாம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். சுனா­மிக்கு முன்னர் பாடப்­புத்­த­கங்­களில் அச்­சி­டப்­பட்­டி­ருந்த காலநிலை அட்­ட­வணை வலு­வி­ழந்­துள்­ள­மையும் கண்­கூடே. இவை இவ்­வா­றி­ருக்கும் போது இயற்­கையில் நடை­பெ­று­கின்ற சில அதி­ச­யங்­களும் கால மாற்­றங்­களும் கடல் கோளுக்­கான அடை­யா­ள­மாக கொள்­ளப்­ப­டு­வது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்? 

கடல்­நீர்­வற்­று­தல்-­அண்­மித்­துள்ள கிண­று­க­ளி­லுள்ள நீர் இழுக்­கப்­ப­டு­தல்-­கடல் நீர் மட்டம் உயர்ந்து அதன் நீர்ப்­ப­ரவல் கரை­யோ­ரங்­களை ஆக்­கி­ர­மித்­தல்-­கால நிலை மாற்­றங்­க­ளுக்கு இடங்­கொ­டுக்க முடி­யாமல் சில மீனி­னங்கள் வெளியா­குதல் முத­லி­ய­ன­வெல்லாம் சுனா­மிக்கு முன்­னரும் கரை­யோ­ரங்­களில் நடை­பெற்­றுத்தான் இருக்­கின்­றன. எனினும் கடந்த சில வரு­டங்­க­ளா­கத்தான் இவை அவ­தா­னத்­திற்கு உட்­ப­டு­வ­தனால் மக்கள் பீதி­யினால் கலக்­க­ம­டை­கின்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்­கான பிரத்­தி­யே­க­மான அடை­யாளம் எதுவும் இது­வரை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. எனினும் கடல்கோள் ஏற்­பட்ட பின்னர் அதில் சூடு­கண்ட மக்கள் ஏதா­வது ஒரு அனர்த்த எச்­ச­ரிக்­கையைச் சந்­திக்கும் போதும் குறிப்­பாக டிசம்பர் மாதம் அண்­மிக்கும் போதும் சுனாமி ஏற்­ப­டுமோ எனச் சந்­தே­கிக்­கின்­றனர். இது தொடர்பில் எத்­தனை விழிப்­பு­ணர்­வுகள் மேற்­கொண்ட போதிலும் அவை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் பய­னற்­ற­தா­கவே ஆகி­வி­டு­கின்­றன.

இவ்­வ­ருடம் டிசம்பர் 31 ஆம் திக­திக்குள் இந்­தியப் பெருங்­க­டலில் மிகப்­பெ­ரிய இயற்கை அனர்த்தம் ஏற்­ப­டலாம் என கேர­ளாவைச் சேர்­ந்த

தனியார் ஆராய்ச்சி நிறு­வன இயக்­குனர் பாபு களகில் பிர­தமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்­பினார். இதன் தாக்கம் ஆசியாக் கண்­டத்தின் தட்­டுக்­க­ளையே மாற்றும் எனவும் இது ஜப்­பான்-­, இந்­தி­யா, -­இ­லங்கை போன்ற நாடு­க­ளைத்­தாக்கும் எனவும் அது சுனா­மி­யாக மாறலாம் எனவும் தெரி­வித்தார். இவ் அறி­விப்­புக்கு வலுச்­சேர்ப்­பது போல் அடுத்து அவுஸ்­தி­ரே­லி­யா-­ சு­மாத்­ரா, இந்­தியா போன்ற நாடு­களில் அடுத்­த­டுத்து ஏற்­பட்ட 7 ரிச்­ட­ருக்கும் குறை­வான நில நடுக்கம் இலங்கை மக்­க­ளையும் பீதி­கொள்ள வைத்­துள்­ளது. இவற்­றிற்­கி­டையே மட்­டக்­க­ளப்பில் பிடிக்­கப்­பட்ட பாம்­பு-­அம்­பா­றையில் அதி­க­மாகப் பிடிக்­கப்­பட்ட மீன்­கள்-­ம­ரு­த­முனை நிந்­தவூர் பிர­தே­சங்­களில் கிணற்று நீர் வற்­றுகை முத­லி­ய­னவும் சுனாமி அனர்த்­தத்­திற்­கான அறி­கு­றி­க­ளாக மக்கள் நம்­பு­கின்­றனர்.

மட்­டக்­க­ளப்பில் பிடிக்­கப்­பட்­டவை பாம்பு அல்ல. அது ஒரு­வகை மீனினம் என்ற அறி­வு­றுத்தல் வெளியாகும் வரை அதுவும் சுனா­மிக்­கு­ரிய அடை­யா­ள­மா­கவே பார்க்­கப்­பட்­டது.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் இலங்­கை­யி­லுள்ள 14 கரை­யோர மாவட்­டங்­களில் 77 சுனாமி முன்­னெச்­ச­ரிக்கைக் கோபு­ரங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நாடு தழு­விய 25 மாவட்ட செய­ல­கங்­களில் 25 மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அனர்த்தம் ஏற்­படும் போது அதனை அறி­விப்­ப­தற்­கான எச்­ச­ரிக்கை மணி கொழும்­பி­லுள்ள அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்­தி­லி­ருந்து ஒலிக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அனர்த்த சேவைக்­கென பிர­தேச செய­ல­கங்கள் தோறும் உத்­தி­யோ­கத்­தர்கள் அமர்த்­தப்­பட்­டுள்­ள­துடன் பயிற்­றப்­பட்ட பாது­காப்­புத்­த­ரப்­பி­னரும் இத­னுடன் இணைந்து அவ­சர சேவை­க­ளுக்­காகத் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். வானிலை அவ­தான நிலை­யத்­துடன் உட­ன­டித்­த­க­வல்­க­ளைப்­ப­ரி­மா­று­கின்ற பொறி­மு­றை­யுடன் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் செயற்­பட்­டு­வ­ரு­கி­றது. பொது­மக்கள் அனர்த்­தங்கள் தொடர்­பான தெளிவு­களைப் பெற 117 என்ற அவ­சரத் தொலை­பேசி இலக்கம் அறி­மு­க­மாகி மும்­மொ­ழி­க­ளிலும் விளக்­கங்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யங்­களால் அறி­வு­றுத்­தல்­க­ளுக்­கான கருத்­த­ரங்­குகள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துடன் குறிப்­பாக நவம்­பர்-­, டி­சம்பர் மாதங்­களில் சுனாமி எச்­ச­ரிக்­கைக்­கான ஒத்­தி­கை­களும் வீதி நாட­கங்கள் உள்­ளிட்ட விழிப்­பு­ணர்­வு­களும் நடை­பெற்ற வண்­ண­முள்­ளன.

2004 இல் சுனாமி ஏற்­பட்ட போது இவ்­வா­றான ஏற்­பா­டுகள் இருக்கவில்லை. இப்­போது இலங்­கையில் இருக்­கின்ற தொழில்­நுட்ப ஏற்­பா­டு­களில் சுமார் மூன்று மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்­ன­ரா­வது இது பற்றி அறி­விக்க முடியும் என அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் கூறு­கி­றது.

இவ்­வா­றான ஏற்­பா­டுகள் எல்லாம் இருக்கும் போது அநா­த­ர­வாக வரு­கின்ற குறுஞ்­செய்­தி­கள்-,­ வட்ஸ்அப் செய்­தி­கள்-­, த­னி­ம­னித வாய்­மொ­ழிப்­ப­ர­வல்கள் முத­லி­ய­வற்றை நம்பி மக்கள் இடம்­பெ­யர்­வதும் அதற்­காகத் தயா­ரா­கு­வதும் முடி­வ­டை­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

பாதிக்­கப்­பட்ட மக்கள் ஓடத்தான் செய்­வார்கள் என்­பது உண்­மை­யா­னாலும் இலங்­கையில் இன்று இவ்­வா­றான ஏற்­பா­டுகள் எல்லாம் வளர்ந்து விட்ட நிலை­யிலும் வதந்­தி­களை நம்­பு­வது மட­மை­யாகும். யானை அடிப்­ப­தற்கு முதல்­தானே அடித்துக் கொள்­வது பற்றி நாம் சிந்­தித்­தே­யாக வேண்டும்.

கடந்த மாத இறு­தி­யிலும் இவ்­வா­றான வதந்­தி­களை நம்பி அம்­பாறை மாவட்­டமே அல்­லோலகல்­லோ­லப்­பட்­டதை ஊட­கங்கள் வாயி­லாக அறிய முடிந்­தது. மக்­களை இடம் பெயர்த்தி விட்டு கள­வு­களை மேற்­கொள்ளத் திரு­டர்கள் தீட்டும் திட்டமே இதுவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சந்தேகிக்கிறது. வடக்கில் கடந்த மாதம் இதனை வைத்து திருட்டுச்சம்பவங்கள் சில இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

சுனாமி ஏற்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டம்- மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய வீடுகள் போன்றன இன்னும் பகிர்ந்தளிக்கப் படாமலேயே உள்ளன. இவற்றை வைத்து அரசியல் நடத்துபவர்களும் வருமானம் ஈட்டுபவர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆழிப்பேரலையை அடுத்து உடமையை இழந்தவர்கள் ஒரு புறம். தம்மை விட்டு இழந்த உறவுகள் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் வாழ்கிறார்கள் என நம்புகின்றவர்கள் இன்னுமொரு புறம். இதனுடன் நிற்காமல் இவ் அனர்த்தத்தின் பின் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களின் வீத அதிகரிப்பும் சுனாமியின் சுவடுகள் விட்டுச் சென்றவைகளே.

எது எவ்வாறான போதிலும் ஆழிப்பேரலை ஏற்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அதன் அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.