கொழும்பை சேர்ந்த இளைஞர்களான அபிஷேக் பெர்னான்டோ மற்றும் மஹின் சுப்ரமணியம் ஆகிய இருவரும் தனது நண்பர்களோடு இணைந்து தயாரித்து இயக்கி வெளிவந்திருக்கும் INDEPENDENT MUSIC VIDEO பாடல் வடிவம் தான் இந்த “தீராவானம்”. 

show srilanka எனும் தமது சுற்றுலாப்பயணக் குழுவின் நண்பர்கள் சகிதம் வழக்கமாக சென்று வரும் பயணங்களில் கிடைத்த அனுபவத்தை ஒரு வீடியோ வடிவமாக உருவாக்கி அதன் மூலமாக ஒரு பாடலை தயாரித்து தமது கலைத்தாகத்தையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

 

பாடலை பாடியிருக்கும் சுதர்ஷன் ஆறுமுகம், ஏற்கனவே இலங்கையின் நவயுக இசைக்கலைஞர்களிடையே பிரபலமான ஒருவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாடல் போட்டி மூலமாக இலங்கைக்கு கிடைத்த ஒரு தனித்துவ அடையாளம் அவர்.

பல்வேறு தமிழ் இசை தயாரிப்புகளை வெளியிட்டிருப்பவர். இலங்கையின் பல வானொலி தொலைகாட்சி ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும் நிலையக் குறியிசைகளில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.

தேசிய விருது பெற்ற கலைஞர். அவரது அற்புதமான குரல்வளம் இந்த பாடலுக்கு மேலும் இதம் சேர்த்திருக்கிறது. புகைப்படக்கலை ஆர்வலர் பிரசாத் ஹரி தேவராஜா ஒளித்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.

இயற்கை சூழ்ந்த பம்பரகந்த நீர்வீழ்ச்சி மலைத்தொடரில் உருவாக்கப்படிருக்கும் இந்தப் பாடலுக்கு இவரது கேமரா மூலம் அழகியலை படம்பிடித்துக் கொடுக்க, இசையை கிறிஸ்டி கிளமென்ட் ராஜமோகன் அளித்திருக்கிறார். இவரது முதல் வாய்ப்பு இது என்று சொல்லமுடியாத அளவுக்கு சிறப்பாகவே இசையமைத்திருக்கிறார். வரிகள் பிரதாஸ் சுப்ரமணியம். இயற்கையின் அழகை நேர்த்தியான வரிகளாய் அமைத்திருக்கிறார். show srilanka அளித்திருக்கும் “தீராவானம்” வீடியோ பாடலின் முழுமையான குழு விபரம் முறையே...

 

எண்ணம் மற்றும் இயக்கம் – மஹின் சுப்ரமணியம்

தயாரிப்பு -  “பெஸ்ட் பிரெண்ட்ஸ்“ நிறுவனத்தின் அபிஷேக் பெர்னான்டோ

நடிகர்கள் – கௌதம் சர்மா, கீர்த்தன் செல்வராஜா, ப்ரீக்ஷித்

படத்தொகுப்பு – அபிஷேக்  & மஹின்

இசை - கிறிஸ்டி கிளமென்ட் ராஜமோகன் 

பாடகர் -  சுதர்ஷன் ஆறுமுகம்

வரிகள் – பிரதாஸ் சுப்ரமணியம்

ஒளித்தொகுப்பு - பிரசாத் ஹரி தேவராஜா

படங்கள் – அபிராம் ஸ்ரீகாந்தன்

போஸ்டர் வடிவமைப்பு – தர்ஷன் சிவகுமார்

இப்பாடலை தயாரித்தமை தொடர்பில் இந்த குழுவினரிடம் கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதைத்தான்..

“தலைநகரில் இருந்து சில மணிநேர பயணம் மேற்கொண்டாலே போதும் இலங்கையின் இயற்கை ஆச்சர்யங்களுக்குள் எம்மால் சஞ்சரித்து விடமுடியும். அப்படியான பயணங்களில் கிடைத்த அனுபவங்கள் எல்லாம் எங்களுக்குள் ஒரு ரசனை நிலையை உண்டு செய்திருந்தது. பாடல் ஒன்றை படமாக்கும் யோசனை வந்த உடனே இயற்கையாகவே இயற்கை பக்கம் மனம் திரும்பியது. இலங்கையின் அழகை ஏதோ எங்களால் முடிந்த சிறிய சதவீதத்தில் பதியும் முயற்சியை மகிழ்வுடன் செய்து முடித்துள்ளோம். “தீராவானம்” உங்களையும் இயற்கையை நோக்கி பயணிக்க தூண்டினால் மகிழ்ச்சியே. 

யூடியுப் தளத்தில் இந்தப் பாடலை காணலாம்.