வவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ரயில் நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து ரயில் வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது.

சாரதி இன்றி குறித்த மினிபஸ் வீதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணிப்பதை அவதானித்த அவ்வீதியால் பயணித்த பயணிகள் தமது வாகனங்களுடன் நாலா புறமும் சிதறி ஓடினர்.

சுமார் 50 மீற்றர் தூரம் வரை பயணித்த குறித்த மினிபஸ்சை பலர் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

இது குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.