கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் உடன்பாட்டுடன் பொது வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அதனடிப்படையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அது குறித்த நடவடிக்கைகளை தற்போது இடம்பெற்றுவருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடி ஆராய்ந்த பின்னர் இறுதி வரைபு அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான சகல வேலைத்திட்டங்களும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் அது தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது. எனினும் அவற்றில் பதினொரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அதற்கெதிராக  நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்ககை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.