2ஜி வழக்கிலிருந்து விடுதலையானதால் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ 2ஜி வழக்கில் விடுதலை ஆனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் நீதி வென்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இறுதியாக தி.மு.க. மீதும், மற்றவர்கள் மீதும் அடிப்படையற்ற, உண்மைக்கு புறம்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் களையப்பட்டுள்ளது. இது ஒரு பொய்யான வழக்கு என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனெனில் இந்த வழக்கில் ஒன்றும் இல்லை. தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.நான் ஏற்கனவே பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யப் போவதில் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பக்கபலமாக நின்ற கட்சித் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திமுக வில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. தற்போதுள்ள நிலையில் மேலும் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்