இத்தாலியைச் சேர்ந்த லெட்டிஸியா மார்சிலி குடும்பத்தில் உள்ள அனைவரும் வலியை உணராதவர்களாக இருக்கிறார்கள். மரபணு மாற்றத்தால் இவர்களுக்கு வலி என்ற உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது.

இந்தக் குறைபாட்டுக்கு ‘மார்சிலி சிண்ட்ரோம்’ என்றே வைத்தியர்கள் பெயர் சூட்டிவிட்டனர்.

52 வயது மார்சிலி பிறந்ததிலிருந்தே வலியை உணராதவராக இருக்கிறார். இவரது மகன், பேரன் என்ற மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. மிகப் பெரிய அறுவை சிகிச்சைகளைக் கூட இவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் செய்ய முடியும் என்பதால் இவர்களை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

“தினசரி வாழ்க்கையில் வலியை உணர முடியவில்லை என்பது எங்களுக்கு வரமான விஷயமாகத்தான் தெரிகிறது. தலைவலி, முட்டிவலி, கழுத்துவலி என்று எதையும் எங்களால் உணர முடியாது. ஆனால் இதில் சாதகமான விஷயங்களை விட பாதகமான விஷயங்கள்தான் அதிகம்.

நம் உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே மூளை வலியை உணரச் செய்து, அதைக் கவனிக்க வைக்கிறது. ஆனால் எங்களுக்கு உடலில் என்ன பிரச்சினை என்றாலும் வலிமூலம் தெரிய வராது. வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவற்றை வைத்துதான் கண்டுகொள்ளவே முடியும்.

இது பல நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடியது. என் பெரிய மகன் லுடோவிகோவுக்குக் கால்பந்து விளையாடும்போதும் அடிபட்டுவிட்டது. வலி தெரியாததால் தொடர்ந்து விளையாடிவிட்டு வந்தான். திடீரென்று ஒருநாள் முட்டியில் வீக்கம் இருந்தபோதுதான் அங்கே காயம் என்பது புரிந்தது. எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது எலும்பில் ஏராளமான விரிசல்கள் இருப்பது தெரிந்தது. பிறகுதான் சிகிச்சையளித்தோம்.

என் சின்ன மகன் பெர்னார்டோ சைக்கிளில் சென்றபோது விழுந்துவிட்டான். வலி தெரியாததால் 14 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிக்கொண்டே வந்துவிட்டான். அவனது கையில் வீக்கம் வந்தபோதுதான் வைத்தியரிடம் சென்றோம். உடனே வரவில்லை என்றால் உள்ளுக்குள் சீழ் வைத்துவிடும் என்று வைத்தியர் கடிந்துகொண்டார்.

எல்லோரும் வலி தெரியாத எங்கள் குடும்பத்தை அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கிறார்கள். அது தவறு. வலிமூலம் நீங்கள் எளிதில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள். எங்களால் அது முடியாது. இந்த நிலை இனி யாருக்கும் வர வேண்டாம்” என்கிறார் மார்சிலி.

“மார்சிலியின் குடும்பத்தினருக்கு வலியை உணரும் எல்லா நரம்புகளும் சரியாக இருக்கின்றன. ஆனால் அவை வேலை செய்வதில்லை. இவர்களின் நிலையை வைத்து வலி இல்லாமல் சிகிச்சையளிக்க முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மயக்க மருந்துக்கு மாற்றாக, வலி உணரும் நரம்புகளைத் தற்காலிகமாகச் செயல் இழக்க வைத்து அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதுதான் எங்கள் ஆய்வின் நோக்கம்” என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ்.