இந்தியா  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தி.மு.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வழக்கிலிருந்து விடுதலையான கனிமொழி,

"சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சத்தை நிச்சயம் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் கடந்த ஆறு வருடங்களாக நான் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

கடந்த ஆறு வருடங்களாக பொய்ப் புகார் அடிப்படையில் இந்த வழக்கில் நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன் என்று எல்லோரிடமும் விளக்க வேண்டியிருந்தது.

அந்த நிர்வாகத்தில் வெறும் 20 நாட்கள் இயக்குநராக இருந்த காரணத்துக்காகவே நான் குற்றவாளியாக்கப்பட்டேன் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந் நிறுவனத்தின் எந்த ஒரு பொது கூட்டத்திலும் நான் பங்கேற்றது கிடையாது. எந்த ஒரு ஆவணத்திலும் நான் கையெழுத்திட்டது கிடையாது.

ஆழமாக கூற வேண்டும் என்றால் தி.மு.கவின் ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடரக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கில் நான் தள்ளப்பட்டேன்.

எனது பணியின் அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் . அரசியல்வாதி அல்ல. இந்த வழக்கில் நான் மோசடி செய்து செல்வத்தை குவித்ததாக குற்றஞ்சட்டப்பட்டேன்.

இன்று நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன்..,,,, நான் அரசியல் மூலம் செல்வத்தை குவிக்க நினைத்திருந்தால் எனது 20 வயதிலேயே அரசியலில் இணைந்திருப்பேன். ஆனால் நான் எனது 40களில் தான் அரசியலில் நுழைந்தேன். அதுவும் கட்சியில் ஏற்பட்ட இடைவெளியை நான் நிரப்ப வேண்டும் என்று கட்சி வேண்டியதால்...

நான் பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் எளிதாக அமைச்சராகியிருப்பேன். நான் அமைச்சர் பதவியை நிராக்கரித்தேன். இதற்கிடையில் நான் பொய்யாக இந்த வழக்கில் இழுக்கப்பட்டேன். அது எனக்கு பயமாக இருந்தது.

தற்போது கட்சியை வலுப்படுபடுத்துவது, தமிழக மக்களுக்காக பணியாற்றுவது இதுதான் எனது எண்ண ஓட்டமாக உள்ளது.

தொடர்ந்து ஆறு வருடங்களாக எனக்கு தூணாக இருந்து ஆதரித்த எனது குடும்பம், கட்சி, தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.