சவுதியின் ரியாத் நகரில் யேமனின் ஷியா கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களில் யேமன் கிளர்ச்சியாளர்கள் சவுதியின் ரியாத் நகரில் நடத்திய இரண்டாவது தாக்குதலாக இது கருதப்படுகிறது.

யேமன்  நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந் நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம்  திகதி சவுதியின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் இந்தத் தாக்குதலை சவுதி தகர்த்தது. இந் நிலையில் மீண்டும் சவுதியின் ரியாத் நகரை குறிவைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சவுதி ஊடகங்கள் தரப்பில் "சவுதியின் ரியாத் நகரிலுள்ள யமனா அரண்மனை மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டது" என்று அந்நாட்டு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.